ஒரு திருச்சபையின் வரலாறு என்பது ஒரு கட்டிடத்தின் வரலாறு மட்டுமல்ல; இறைவன் மனிதர்களின் வாழ்வில் செயல்பட்ட கிருபையின் சாட்சியாகும். மிஷனரிகளின் அர்ப்பணிப்பு, தமிழ் போதகர்களின் ஊழியம், முன்னோர்களின் ஜெபம் மற்றும் விசுவாசிகளின் தியாகம் ஆகியவற்றின் வழியாக வளர்ந்த நமது திருச்சபையின் பயணம் இது.
தூய தோமையார் மலை
இறைவன் ஆயத்தப்படுத்திய வரலாற்று மேடை
சென்னையின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள தூய தோமையார் மலை, கிறிஸ்தவ மரபில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. இயேசு கிறிஸ்துவின் சீடரான புனித தோமா கி.பி. 52-இல் இந்தியாவிற்கு வந்து நற்செய்தியை அறிவித்தார் என்ற திருச்சபை மரபு, இம்மலையை உலகக் கிறிஸ்தவ வரலாற்றோடு இணைக்கிறது. திருச்சபை மரபின்படி, புனித தோமா கி.பி. 72-இல் இம்மலையில் இரத்தச் சாட்சியாக மரித்தார். தலைமுறைகளின் ஜெபமும் விசுவாசச் சாட்சியும் இவ்விடத்தை ஓர் ஆன்மீக நினைவிடமாக விளங்கச் செய்துள்ளன.
1817
உலகமே என் திருச்சபை
“The World is My Parish” என்ற அருள்திரு ஜான் வெஸ்லி (Rev. John Wesley) அவர்களின் பரந்த ஊழியப் பார்வையும், அருள்திரு தாமஸ் கோக் (Rev. Thomas Coke) அவர்களின் மிஷன் ஆர்வமும் வெஸ்லியன் மெத்தடிஸ்ட் மிஷனரி சங்கத்தின் (Wesleyan Methodist Missionary Society – WMMS) உலகளாவிய பணிக்கு அடித்தளமாக அமைந்தன. 1817-இல் அருள்திரு ஜேம்ஸ் லிஞ்ச் (Rev. James Lynch) மெட்ராஸுக்கு வந்து, தூய தோமையார் மலையில் தமிழ் மக்களிடையே ஊழியத்தைத் தொடங்கினார். தமிழ் அறிஞரான அருள்திரு எலிஜா ஹூல் (Rev. Elijah Hoole) அவர்களும் இங்கு பலமுறை பிரசங்கித்துள்ளார்.
1819 · 1829
ஒரு விதை விதைக்கப்பட்டது
1819-இல் நிறுவப்பட்ட தமிழ்ப் பள்ளி, கல்வி வழங்கும் இடமாகவும் விசுவாசிகள் ஒன்றுகூடி ஆராதிக்கும் இடமாகவும் பயன்பட்டது. திருமதி இசாக்கே (Mrs. Isacke) அவர்கள் மிஷன் பணிக்காக வழங்கிய நிலத்தில், 1829-இல் கோத்திக் (Gothic) கட்டிடக்கலை முறையில் வெஸ்லியன் சிற்றாலயமும் பள்ளிக்கூடமும் அமைக்கப்பட்டன. இந்தச் சிற்றாலயம் ஆங்கில மற்றும் தமிழ் திருச்சபையினரின் பொதுவான ஆராதனை மையமாக விளங்கியது.
1860
ஒரு விதை வேரூன்றியது
தமிழ் மொழியில் ஆராதனை, போதனை மற்றும் மேய்ப்புப் பணி வளர்ந்த நிலையில், 1860 மே மாதத்தில் அருள்திரு ஜோசையா ஈவர்ஸ் (Rev. Josiah Evers) முதல் நிரந்தரத் தமிழ் போதகராக நியமிக்கப்பட்டார். இது தமிழ் திருச்சபையின் தனித்துவமான ஊழிய அமைப்பு வலுப்பெற்ற முக்கியத் திருப்புமுனையாகும். வெஸ்லியன் மிஷனரிகளின் வழிநடத்தலில் உள்ளூர் ஊழியமும் இந்தியத் தலைமைத்துவமும் வளர்ந்தன. கிண்டியில் நிரந்தர வளாகம் அமையும் முன்பு, தூய தோமையார் மலை இறையியல் பயிற்சியின் முதல் மையமாகவும் விளங்கியது.
1935
நிழல் தரும் விசுவாச விருட்சம் மலர்ந்தது
தமிழ் திருச்சபையின் வளர்ச்சியால் தனி ஆலயத்தின் தேவை வலுப்பெற்றது. அருள்திரு சி. ஜே. எஸ். அப்பாதுரை அவர்களின் 1932–1935 ஊழியக் காலத்தில் புதிய ஆலயக் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 1934 டிசம்பர் 31 அன்று அருள்திரு சார்ல்ஸ் ஹென்றி மோனஹன் (Rev. Charles Henry Monahan) மற்றும் அருள்திரு ஏ. ஓ. பிரவுன் (Rev. A. O. Brown) ஆகியோர் C. W. Frost & K. P. Chetty நிறுவனத்துடன் ரூ.19,143 மதிப்பிலான கட்டுமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். Butt Road-இல் Bungalow No. 51-இன் பின்புறத்தில், இன்றைய 49, Mount Poonamallee Road முகவரியில் அமைந்த ஆலயம் 1935-இல் கட்டி முடிக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டது. பலிபீடத்தின் மேலுள்ள தனித்துவமான குவிமாடம் ஆலயத்தின் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது.
1947
ஒரே திருச்சபை – புதிய பயணம்
1947 செப்டம்பர் 27 அன்று தென்னிந்திய திருச்சபை (Church of South India – CSI) உருவானது. இந்த வரலாற்று ஒன்றிப்பின் மூலம், தூய தோமையார் மலை வெஸ்லி தமிழ் திருச்சபை சி.எஸ்.ஐ. மெட்ராஸ் திருமண்டலத்தின் ஓர் அங்கமாகத் தொடர்ந்தது. நிர்வாக அமைப்பு மாறினாலும், தலைமுறைகளைக் கடந்து வளர்ந்த ஆராதனை வாழ்வும் தமிழ் ஊழியமும் நற்செய்திப் பணியும் தொடர்ந்தன.
2025
பாரம்பரியம் காக்கப்பட்டது – புதிய தலைமுறைக்காக
1935 ஆலயத்தின் வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தபடியே புதுப்பிப்பும் விரிவாக்கமும் மேற்கொள்ளப்பட்டன. தமிழக அரசின் பாரம்பரியக் கட்டிடப் பாதுகாப்புத் திட்டத்தின் நிதியுதவி, சபை உறுப்பினர்களின் காணிக்கைகள் மற்றும் நன்கொடையாளர்களின் ஆதரவு இப்பணிக்கு உதவின. அருள்திரு வெலிங்டன் ஜேசுதாஸ் அவர்களின் தலைமையில் பாஸ்டரேட் கமிட்டி, மேற்பார்வைக் குழு, பொறியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் திருச்சபையினர் இணைந்து உழைத்தனர். பலிபீடம், குவிமாடம் மற்றும் பழைய மேற்கூரை அமைப்புகள் பாதுகாக்கப்பட்டன. பாரம்பரிய வடிவில் மணி கோபுரம் மீண்டும் உருவாக்கப்பட்டது; வடக்கு, தெற்கு, மேற்குப் பகுதிகளில் விரிவாக்கமும் மேல்தள பால்கனியும் அமைக்கப்பட்டன. அமரும் பரப்பளவு சுமார் 4,200 சதுர அடியிலிருந்து 8,765 சதுர அடியாகவும், இருக்கை வசதி சுமார் 250 பேரிலிருந்து 850 பேராகவும் உயர்ந்தது. மையக் குளிர்சாதன வசதியும் நவீன ஒலி அமைப்பும் சேர்க்கப்பட்டன. 2025-இல் மறுஅர்ப்பணிக்கப்பட்ட ஆலயம், அடுத்த தலைமுறைக்குப் பாதுகாத்து ஒப்படைக்கப்பட்ட விசுவாசப் பாரம்பரியத்தின் புதிய அத்தியாயமாகும்.
வெஸ்லி தமிழ் ஆலயம் – இன்றைய தோற்றம்
1860–2025 · 165 ஆண்டுகள்
ஆலயத்தில் பணியாற்றிய போதகர்கள்
வெஸ்லியன் மெத்தடிஸ்ட் மிஷன் மற்றும் தென்னிந்திய திருச்சபை காலங்களில் நமது ஆலயத்தில் பணியாற்றிய போதகர்களின் பட்டியல்.
போதகர்களின் பட்டியல் · 1860–2025
Read our English history book
Explore the church’s history through the original published pages.